தேசிய ரயில் திட்டம் 2030, ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் இறுதி அறிக்கை இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என ரயில்வே துறையின் தலைமைச் செயல் அலுலவர் வினோத் குமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமல்படுத்தப்பட்ட அல்லது எதிர்கால தொழிற் துறை திட்டங்களைக் கருத்தில் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
2030ஆம் ஆண்டின் தேவைக்கேற்ப ரயில் போக்குவரத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்குக்கான திட்டத்தை தயாரித்துள்ளோம். 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வரை நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் அதற்கான செலவு குறித்த தகவல்களும் அதில் இடம்பெறவுள்ளன. ரயில்வே பாதையை அதிகரிப்பது, மின்சார ரயில்களாக மாற்றுவது, சரக்கு ரயில் நடைபாதை, நிலக்கரியினை ஏற்றிச் செல்வதற்கான திட்டம் உள்ளிட்டவை தேசிய ரயில் திட்டம் 2030இல் இடம்பெறும்.