பாட்னா:பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரேணு தேவி, பிகாரின் முதல் பெண் துணை முதலமைச்சராக நவ.16ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ரேணு தேவி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நோனியா சமூகத்தைச் சேர்ந்த இவர், பெட்டியா தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்வானார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதன் மோகன் திவாரியை 18 ஆயிரத்து 79 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் இவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, பிகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
1981ஆம் ஆண்டிலிருந்து அரசியல் பொது வாழ்க்கையில் இருக்கும் ரேணு தேவி, 1988ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாஜகவின் பெண்கள் அணியிலும் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். இந்நிலையில் 1993ஆம் ஆண்டு மகிளா மோர்சா மாநில தலைவராக உயர்ந்தார். இதே பதவிக்கு 1996ஆம் ஆண்டும் மீண்டும் தேர்வானார்.
2014ஆம் ஆண்டு இவருக்கு கட்சியில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். ரேணு தேவி, நிதிஷ் குமாரின் 2005-2009ஆம் ஆண்டு அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் கலாசார அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். ரேணு தேவி பெட்டியா தொகுதியில் நான்காவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிகாரின் துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் தேர்வு