கேரளாவில் வாழ்ந்துவந்த முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் (87) உடல்நலக் குறைவின் காரணமாக திருவனந்தபுரத்தில் இன்று இயற்கை எய்தினார்.
செங்கோட்டை ஆவுடைநாயகம் பிள்ளை, நாகர்கோயில் செல்லம்மாள் தம்பதியினருக்கு 1934ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முந்தைய பிளவுபடாத திருவிதாங்கூரில் மாதவன் பிறந்தார். திருவனந்தபுரம் கடைவீதியில் அங்காடியில் சிறு வணிகம் செய்துவந்த தனது தந்தையின் தொழில் நிமித்தமாக அங்கே வாழ்ந்துவந்த ஆ. மாதவன், தனது பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்திலேயே முடித்தார்.
திருவனந்தபுரம் கடைவீதியில் செல்வி ஸ்டோர் என்ற சிறுவணிகம் (பாத்திரக் கடை) செய்துவந்த தனது தந்தையின் மூலமாகப் பின்நாளில் திராவிட இயக்கம் குறித்த புரிதலைப் பெற்ற மாதவன், திராவிட இயக்க ஆதரவாளராகத் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.
தனது 21ஆவது வயதில் முதல் சிறு கதையை வெளியிட்ட அவர், பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியத் தளத்தில் செயல்படலானார்.
திருவனந்தபுரம் சாலைத் தெருவின் கதையாடல்களைப் பின்னணியாகக் கொண்ட பெரும்பாலான கதைகளை எழுதிய அவரை ‘கடைத்தெரு கதைசொல்லி’ என்றே அவரது வாசிப்பாளர்கள் விளித்தனர். கடைத்தெருக்கதைகள் என்ற ஆ. மாதவனின் எழுத்தின் வழியாகவே தமிழிலக்கிய உலகில் ஒரு கடைத்தெருக்களும் இலக்கியத் தகுதி பெற்றது என்றால் மிகையல்ல.
ஆ. மாதவனின் முதல் புதினமான ’புனலும் மணலும்’ கரமனையாற்று ஓரத்தில் மணலள்ளி வாழ்ந்துவந்த எளிய மக்களின் காலடித் தடத்தில் யதார்த்தமாக கதை சொல்லியது. தமிழில் மிகச்சிறந்த புதினங்கள் என இன்றுவரை புகழப்படும் ‘கிருஷ்ணப் பருந்து’, ‘தூவானம்’ ஆகியவை அவர் எழுதியவைதாம்.