நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க கரோனா பரிசோதனைகள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எம்.ஆரில் விஞ்ஞானியும் ஊடக ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் லோகேஷ் சர்மா கூறுகையில், " நேற்று மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 161 நபர்களுக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை நாட்டில் மொத்தமாக 1 கோடியே 24 லட்சத்து 12 ஆயிரத்து 664 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாத இறுதியில் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் கரோனா சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்
நாட்டில் நேற்று(ஜூலை 14) ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 161ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.