இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதிவரை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்துகொண்டு, நகரத்தை விட்டு வெளியேறிவருகின்றனர்.
நீண்டதூரம் பயணப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை மொத்தமாக 302 சிறப்பு ரயில்களில், வெறும் 2 ரயில்கள் மட்டுமே மேற்கு வங்கத்திலிருந்து இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க அரசுக்கு எழுதிய கடிதத்தில், “குடிபெயர்ந்த வங்காளிகளை தனது மாநிலத்திற்கு அழைத்துவர மேற்கு வங்க அரசு அக்கறைக் காட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மேற்கு வங்க அரசு, "கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சிக்கியிருக்கும் வங்காளிகளை மேற்கு வங்கம் அழைத்துவர 8 ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளோம்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6,000 பேர் ஏற்கனவே திரும்ப அழைத்து வரப்பட்டுவிட்டதாகவும், மேலும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை ஏற்றிவர மேலும் 10 ரயில்கள் விரைவில் சென்றடையும்" எனத் தெரிவித்தது.
இந்நிலையில் சிறப்பு ரயில் இயக்கம் குறித்து கருத்து தெரிவித்த அலுவலர்கள், “வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மேற்குவங்க மக்களை அழைத்துவர தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களிலிருந்து மேற்கு வங்கம் நோக்கி இயக்க எட்டு ரயில்களுக்கான அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம்.
கர்நாடகாவிலிருந்து மூன்று ரயில்களும், பஞ்சாப், தமிழ்நாட்டிலிருந்து தலா இரண்டு ரயில்களும், தெலங்கானாவிலிருந்து ஒரு ரயிலும் அடுத்த சில நாள்களில் மேற்குவங்கத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும்” எனத் தெரிவித்தனர்.
குடிபெயர்ந்த கூலித்தொழிலாளர்களை மேற்கு வங்கம் அழைத்துவர 8 ரயில்களுக்கு அனுமதி! இதனையடுத்து, மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையில் மூண்ட பனிப்போர் தற்போது தணிந்துள்ளது.
இதையும் படிங்க:302 ரயில்களில் 2 மட்டுமே இயக்கம்: வஞ்சிக்கப்படும் வங்காளத் தொழிலாளர்கள்?