கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் சட்டப்பேரவை உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருப்பவர் முருகேஷ் நிரானி. அண்மையில் எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கினார். அப்போது நிரானிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.
சுவாமிகள் பேச்சு
ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நிரானி, ஆன்மிக குரு வச்சானந்த சுவாமிகளிடம் முறையிட்டார். இது தொடர்பாக தாவனஹரே அருகிலுள்ள ஹரிஹரா பகுதியில் நடந்த விழாவில் பேசிய வச்சானந்த சுவாமிகள், “முதலமைச்சரே நீங்கள் நல்ல மனிதர். உங்களுக்கு முருகேஷ் நிரானி ஏராளமான உதவிகள் செய்துள்ளார். உங்கள் கைகள் அவரை (நிரானி) கைவிட்டால், ஒருங்கிணைந்த எங்கள் சமுதாயத்தின் கைகள் உங்களைவிட நேரிடும்” என்றார்.
அந்த மேடையில் முதலமைச்சர் எடியூரப்பாவும் அமர்ந்திருந்தார். வச்சானந்த சுவாமிகளின் அதிரடி பேச்சால் ஒரு கட்டத்தில் எடியூரப்பாவின் முகம் சிவந்துவிட்டது. இதற்குப் பதிலளிக்கும்வகையில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, “நீங்கள் இப்படி பேசினால் நான் போய்விடுவேன். நீங்கள் என்ன பேசுகிறீர்கள். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் கிளம்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசக்கூடாது. நீங்கள் இப்படிப் பேசினால் என்னால் வேலை செய்ய முடியாது. நீங்கள் எனக்குப் பரிந்துரைகளை வழங்க முடியும். ஆனால் என்னை அச்சுறுத்த முடியாது" என்று கூறினார்.
எடியூரப்பா பதில்
முன்னதாக வச்சானந்தா சுவாமிகளை அம்மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் வச்சானந்தா சுவாமிகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.