கரோனா தொற்று குறித்து நாள்தோறும் மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரோனா தொற்றால் பாதிக்ககப்பட்டோரின் தரவுகள் குறித்து சுகாதார அமைச்சகம் கலந்தாலோசித்ததாகவும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் விகிதத்தைவிட, குணமடைந்தோரின் விகிதம் அதிகம் எனவும் தெரிவித்தார்
இன்றுவரை மொத்தம் 1,749 பேர் (13.6 %) குணமடைந்துள்ளதாகத் தெரிவித்த லாவ் அகர்வால், நோய்த் தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் குறைந்துள்ளதாகவும் மகிழ்ச்சித் தகவல் தெரிவித்தார். கடைசி ஏழு நாட்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசு எவ்வாறு நிலவரத்தைக் கையாண்டு வருகிறது என்பதை இந்தத் தரவுகள் காட்டுவதாகவும் தெரிவித்தார்.