தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடியின் புல்லட் ரயில் திட்டம், வீணான ஒரு நினைவுச் சின்னம்' - காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக அறியப்படும் புல்லட் ரயில் திட்டத்தை 'வீணான ஒரு நினைவுச் சின்னம்' என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Randeep Singh Surjewala tweet on bullet train delay
Randeep Singh Surjewala tweet on bullet train delay

By

Published : Sep 5, 2020, 6:18 PM IST

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக மும்பை-அகமதாபாத் இடையேயான நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் தாமதமாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இத்திட்டம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து தேசிய அதிவிரைவு ரயில் கழகத்தின் தலைவர் அச்சால் கரே கூறுகையில், "கோவிட்-19 காரணமாக நாங்கள் ஒரு சில டெண்டர்களைத் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டியிருந்தது. கரோனா காரணமாக இத்திட்டம் எவ்வளவு தூரம் தள்ளிப்போயுள்ளது என்பதை மதிப்பிடுவது கடினம்" என்றார்.

நாட்டின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாக அறியப்படும் புல்லட் ரயில் திட்டம், முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கும், மோடியின் குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஷோ அபேவும் மோடியும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயும், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தலா ஐந்தாயிரம் கோடி ரூபாயும் வழங்கவுள்ளன. மீதித்தொகையை ஜப்பான் அரசு 0.1 விழுக்காடு வட்டியில் கடனாக வழங்குகிறது.

508 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த ரயில் பாதையில், 345 கி.மீ. அல்லது 68 விழுக்காடு ரயில் பணிகளை நிறைவேற்ற ஏற்கனவே டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. மீதமிருக்கும் டெண்டர்களைத் திறப்பத்தில்தான் தற்போது கரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலதாமதம் காரணமாகவும், தொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பு காரணமாகவும் இத்திட்டத்தின் மதிப்பு 1.08 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.10 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக தேசிய அதிவிரைவு ரயில் கழகம் ஏற்கனவே 63 விழுக்காடு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அதன்படி குஜராத்தில் சுமார் 77 விழுக்காடு, தாதர் நகர் ஹவேலியில் 80 விழுக்காடு, மகாராஷ்டிராவில் 22 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜெவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "508 கிலோமீட்டருக்கு 1,10,000 கோடி ரூபாய். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 217 கோடி ரூபாய். இப்போது இத்திட்டத்தின் செலவு 90 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. மேலும் தாமதம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மோடியின் புல்லட் ரயில். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 24 விழுக்காடு சரிந்துள்ளது. பொருளாதாரம் கடுமையான சரிவை எதிர்கொண்டு, நாட்டில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இது வீணான செலவுகளின் நினைவுச் சின்னம். தற்போது தேசத்தின் முன்னுரிமையாக இது இருக்க வேண்டுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஷின்ஷோ அபே காலத்தில் இந்திய - ஜப்பான் உறவு

ABOUT THE AUTHOR

...view details