அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள் என்று மத்திய பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொது விநியோக முறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் வரவேற்கத்தக்கவை.
அதை நாங்கள் தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறோம். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் இணைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்திற்கு தலா 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொது விநியோக திட்டங்களுக்கு கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது.
2003ஆம் ஆண்டு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் விரிவாக்கப்பட்டபோது, இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில் மாற்றுத்திறனாளிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், PMGKAY மற்றும் ANB தொகுப்பின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையின் அலட்சிய போக்கு: பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு