லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் அறிவித்துள்ளார்.
74 வயதான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார்.
இவரது மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில், ''அப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது லோக் ஜனசக்தி கட்சி, அம்மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த இவரது கட்சி இம்முறை பிரிந்து வந்து தனியாக போட்டியிடுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த ராம் விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சராக பதவி வகித்தார். ரயில்வே, விவசாயம், தகவல் தொடர்பு என்று பல்வேறு துறைகளின் அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் பதவி வகித்துள்ளார்.
நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார் ராம் விலாஸ் பஸ்வான். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், நாட்டின் பெரிய அரசியல் தலைவர்களுடன் களம் கண்டவராவார்.
இதையும் படிங்க: பிகார் தலித் வாக்குகள் யாருக்கு?