டெல்லி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990ஆம் ஆண்டில் குஜராத்தின் சோம்நாத் நகரிலிருந்து அயோத்தி வரை நடந்த ரத யாத்திரைக்கு தலைமை தாங்கிய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி செவ்வாய்க்கிழமை (ஆக.4), “தனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு கனவு, ராமர் கோயிலின் பூமி பூஜை மூலம் நிறைவேறி வருகிறது. இது எனக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்று மற்றும் உணர்ச்சிபூர்வமான தினம்” என்று கூறினார்.
மேலும், “இறைவன் ராமரின் நற்பண்புகளை அனைத்து இந்தியர்களுக்கும் ராமர் கோயில் ஊக்குவிக்கும் என்று கூறிய அவர், இது அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய ஒரு வலுவான வளமான, அமைதியான, இணக்கமான தேசமாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து எல்.கே. அத்வானி வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறுகையில், “ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க கனவுகள் பலனளிக்க நீண்ட நேரம் எடுக்கும். காத்திருப்பு மிகவும் பயனுள்ளது. ஸ்ரீ ராமரின் பிறப்பிடமான அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஸ்ரீ ராம ஜென்ம பூமியில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டமும், விருப்பமும் ஆகும். இது உண்மையில் எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்று மற்றும் உணர்ச்சிபூர்வமான தினம். இந்தக் கோயில் அனைத்து இந்தியர்களுக்கும் நல்லொழுக்கங்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஸ்ரீ ராமர் கோயில் இந்தியாவை ஒரு அமைதியான, இணக்கமான தேசமாகவும், வலுவான மற்றும் வளமானதாகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதும் எனது நம்பிக்கை. ஸ்ரீ ராமர் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் ஆசீர்வதிப்பாராக. ஜெய் ஸ்ரீ ராம்!" எனக் கூறியுள்ளார்.
ராமர் கோயில் வலுவான, இணக்கமான தேசமாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும்: எல்.கே. அத்வானி மேலும், “சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ரத யாத்திரை பலரின் கனவுகள், ஆற்றல்கள் மற்றும் ஆர்வங்களை வளர்க்க உதவியது. "ராம ஜென்ம பூமி இயக்கத்தின் போது, 1990ஆம் ஆண்டு சோம்நாத் முதல் அயோத்தி வரை ரத யாத்திரையின் வடிவத்தில் ஒரு முக்கிய கடமையை விதி செய்ய வைத்தது என்று நான் தாழ்மையுடன் உணர்கிறேன்.
இந்தப் புனித தினத்தில், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் தியாகங்களையும் செய்த புனிதர்கள், தலைவர்கள், இந்தியர்கள் மற்றும் உலகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் கலாசார மற்றும் நாகரிக பாரம்பரியத்தில் கடவுள் ராமர் மதிப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளார். இது அருள், கண்ணியம் மற்றும் அலங்காரமானது” என்றும் அத்வானி கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று (ஆக.5) அடிக்கல் நாட்டப்படும் நிலையில், பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, வீடியோ கான்பரன்சிங் மூலம் பூமி பூஜையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிக்கல் நாட்டும் விழாவுக்குப் பிறகு அயோத்தியில் ராம் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
இதையும் படிங்க : ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!