1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அப்போது உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சிங், தனது பதவியைத் துறந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக வலுவாகக் காலூன்றியதற்கு முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அத்வானி ஆகியோருடன் கல்யாண் சிங்கும் முதன்மையானவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக இவர் ஒருநாள் திஹார் சிறையில் இருந்ததோடு, 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டினார்.
இவர் ஈடிவி பாரத் செய்திகளுக்காக அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், ''என் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். இப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. அதனால் எனது வாழ்வில் எவ்வித வருத்தங்களும் இல்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அயோத்தியில் 3 லட்சம் கர சேவர்கள் இருந்தார்கள். அதனால் என்னால் அதனைத் தடுக்க முடியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த நான் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி வழங்கினால், அது நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கும்.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது: கல்யாண் சிங் அந்த நாளில் நான் முதலமைச்சர் பதவியை இழந்ததற்காகக் கவலையடையவில்லை. இப்போது எனது விருப்பத்துடன் சேர்ந்து நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பமும் நிறைவேறவுள்ளது. வெறும் கோயிலாக மட்டும் அல்லாமல் தேசத்திற்கான கோயிலாகவும் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்றார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கல்யாண் சிங், சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:22 நாட்களில் ராமாயணம் எழுதிய 8 வயது சிறுமி