லக்னோ (உத்தரப் பிரதேசம்) :உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராம லீலை என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் நடைபெறும் ராம லீலை நாடகத்தை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையுடன் இணைந்து, ராம லீலை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா, கலாசாரம், மத விவகார துறை அமைச்சர் நீல்காந்த் திவாரி மற்றும் பாஜக எம்.பி., பிரவேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
முதல்நாள் நிகழ்வான அயோத்தியின் சராயு நதிக்கரையில் நடக்கும் லக்ஷ்மண கீலா -விலிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பைத் தொடங்குகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு தவிர, அரசின் யூடியூப், சமூக வலைதள ஊடகங்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.