கடந்த ஜூன் 19ஆம் தேதி மணிப்பூரில் ஒரு இடம் உள்பட 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலங்களவை இடத்துக்கு பாஜக சார்பில் லீசெம்பா சனாஜோபாவும் காங்கிரஸ் சார்பில் மங்கி பாபுவும் போட்டியிட்டனர். தேர்தல் நடந்துமுடிந்த அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின.
அதில் 28 வாக்குகள் பெற்று லீசெம்பா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளரான மங்கி பாபு 24 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். வெற்றிக்குத் தேவையான வாக்குகள் இருந்தும் மங்கி பாபு தோல்வியுற்றதால், மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைமைக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இச்சூழலில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்ததாகத் தெரியவந்துள்ளது. வாங்க்கே தொகுதி எம்எல்ஏ ஒக்ரம் ஹென்றி சிங், சாகல்பாண்ட் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் இமோ சிங் ஆகிய இருவருக்கும் மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.