முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவனே ஆகியோருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வடக்கு மலைப் பகுதிக்குச் சென்று, எல்லையில் உள்ள நிலைமைகள் குறித்து மூத்த ராணுவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் ராஜ்நாத் சிங் உரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம் நாட்டைக் காக்கும் இந்தத் துணிச்சலான, தைரியமான வீரர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் உயர்மட்ட ராணுவ அலுவலர்ளுடன் ஆய்வுசெய்தார். அப்போது, பாகிஸ்தானின் எந்தவொரு தவறான செயலுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுக்குமாறு வீரர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட கூட்டத்தில், பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோட்டில் கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறும் அறிவறுத்தியுள்ளார். இதற்கிடையில், நேற்று அவர் அமர்நாத்தின் புனித குகைக்குச் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.