ஃபிரான்ஸின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடமிருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆயுதங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் திறன் இந்தப் போர் விமானத்திற்கு உள்ளது.
இதனையடுத்து, முதல் ரஃபேல் போர் விமானம், ஃபிரான்ஸில் உள்ள போர்டோ நகரில் விஜயதசமி தினமான நாளை (அக்., 8இல்) நடக்கவுள்ள நிகழ்ச்சியில், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனைப் பெற்றுக் கொள்ளும் விதமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக இன்று ஃபிரான்ஸ் நாட்டிற்குச் செல்லவுள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். போர்டோ நகருக்குச் செல்வதற்கு முன்பாக, அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசவிருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 9ஆம் தேதி நடக்கவுள்ளது.