குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள உதய் சிவானந்த் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனையின் மூன்று தளங்களில் இயங்கிய வந்தது, கோகுல் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை. இதில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். 28 பேர் உயிருக்கு தீங்கின்றி மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில், தீவிர சிகிச்சைப் பிரிவில் போதிய காற்றோட்டம் இல்லாதது தெரிய வந்தது. தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இந்த விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, விபத்துக்கு காரணமான சேர்மன் பிரகாஷ் மோடா, நிர்வாக இயக்குநர் விஷால் மோத்தா உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஐவர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304 (A) -இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்கோட் துணை காவல் ஆணையர் மனோகர்சிங் ஜடேஜா தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கான எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லை என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டின் நுழைவு வாயில் நிலையான விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை, தீ அல்லது அவசர கால வெளியேறும் வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் ஜடேஜா தெரிவித்தார்.
முதல்கட்ட விசாரணையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.