குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பிக்கள்) பயணம் செய்ய இத்தாலி நாட்டைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்திடம் இருந்து, ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு - அப்ரூவர் ஆகிறார் ராஜீவ் சக்சேனா
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமின் பெற்றார். இதற்கிடையேகடந்த 6-ம் தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் அப்ரூவராக விரும்புவதாக சக்சேனா வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து ராஜீவ் சக்சேனாவின் இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ராஜீவ் சக்சேனாவின் வாக்குமூலம் குறித்து டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகஇருக்கும் என தெரிவித்தார்.