புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூபாய் 18 லட்சம் செலவில் நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமும், ரூபாய் 8.8 லட்சம் செலவில் தாய் பால் வங்கியும் தனியார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த தாய் பால் வங்கியை பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் ஸ்வார்டு திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தாய் பால் வங்கி குறித்து அலுவலர்கள் கூறுகையில், தாய் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மாற்று தாய்மார்கள் தனது பாலை தானம் கொடுப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும், தானமாக கொடுக்கும் பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கவும் தாய் பால் வங்கி உதவும். மேலும் தாய் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இது மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.
நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமானது குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இதய பிரச்னைகள் கண்டுபிடிக்க உதவும் என தெரிவித்தனர்.