இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக மத்திய அரசு கொண்டாடிவருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் பலரின் பங்கு இருந்தாலும், முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு அளப்பரியதாகும். மிக நீளமாக எழுதப்பட்ட நம் அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசியல் நிர்ணய சபையைச் சேர்ந்த 36 பேர் உருவாக்கினர். பீஹார் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்த சபையின் நிரந்தர தலைவராக டிசம்பர் 11ஆம் தேதி 1946ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
ராஜேந்திர பிரசாத்தின் பேத்தி தாரா சிங் இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை. ராஜேந்திர பிரசாத்தின் வழிகாட்டலில்தான் அரசியலமைப்பு சட்டம் மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க ஆவணமான நம் அரசியலமைப்பு சட்டம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு தெரியவில்லை. பிரசாத்தின் பங்கு அளப்பரியதாக இருந்தபோதிலும், பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அவரின் பங்கு இடம்பெறாதது வருத்தமளிக்கிறது" என்றார்.
வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் சம அளவில் உரிமைகள் பகிர்ந்து தருவதில் பல சவால்கள் இருந்ததாக அரசியல் விமர்சகரும் ஏ.என். சின்ஹா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் முன்னாள் இயக்குநருமான டி.எம். திவாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "இந்த சவால்களை எதிர்கொண்டு பிரச்னையை தீர்த்ததில் ராஜேந்திர பிரசாத் பங்கு மறக்க முடியாத ஒன்று. நேர்மையின்பால் நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசியலைப்பு சட்டம் உருவானதற்கு முக்கிய காரணம் பிரசாத் ஆவார். ராஜேந்திர பிரசாத்தின் கருத்தை கேட்டறிந்த பின்புதான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என்றார்.
அரசியலமைப்பை உருவாக்கியதில் மற்ற தலைவர்களைக் காட்டிலும் ராஜேந்திர பிரசாத்துக்கு அதிக பங்கு உள்ளது என ராஜேந்திர பிரசாத் நினைவு அருங்காட்சியகத்தின் தலைவர் மனேஜ் வர்மா தெரிவித்துள்ளார். 1946ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தை தலைவர்கள் அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதற்காக எடுத்துக்கொண்டனர். அரசியல் நிர்ணய சபையில் 292 பிராந்தியங்கள், 93 மாநிலங்களைச் சேர்ந்த 389 உறுப்பினர்கள் இருந்தனர். பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சபையில் 299 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.