கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ராஜஸ்தான் அரசு புதிதாக 2,000 மருத்துவர்களையும் 9,000க்கும் மேற்பட்ட செவிலியர்களையும் கரோனா தொற்று சிகிச்சை பணிக்காக பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 735 புதிய மருத்துவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் 2,000 மருத்துவர்களை பணியமர்த்தும் வேலை நடைபெற்றுவருவதாகவும் ரகு ஷர்மா கூறினார்.
அதுமட்டுமின்றி, ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்டின் உத்தரவின்படி 9,000 செவிலியர்களை பணியில் அமர்த்தும் பணி விரைவாக முடியும் என்றார். அதேபோல் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தவும், அனைத்து மருத்துவ வசதிகளுடன் மருத்துவ நிறுவனங்களை வைத்திருக்கவும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
கரோனா தடுப்பு குறித்து கூறுகையில் 'தற்சமயம் ஒரு நாளைக்கு 4,700 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. பின்வரும் நாள்களில் பரிசோதனை எண்ணிக்கை 10,000த்தை எட்டும். அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் கரோனா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. கரோனா தொற்று பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவ குழுக்களையோ பிற குழுக்களையோ தாக்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க... களப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக நோடல் அலுவலர்களை நியமனம் செய்யுங்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்