ராஜஸ்தான் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், அவரது ஆதாரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையாக, அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகரின் இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 24ஆம் தேதிவரை உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 24) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசராணைக்குப் பின், சச்சின் பைலட் உள்பட 19 உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை எனவும், தற்போதைய நிலையே தொடரும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.