ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு காங்கிரஸ் கட்சியில் அரசியல் தலைமைக்காக போராடும் சீனியர்ஸ் vs ஜூனியர்ஸ் போட்டியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
மாற்றுக் கட்சிகள் ஜூனியர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை செய்துவரும் நிலையில், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய காலத்தில் தாங்கள் மூத்தத் தலைவர்களால் ஒதுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளம் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
2020ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முகமாக இருந்த சிந்தியா (49) தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அடுத்து, தான் ஓரங்கட்டப்படுவதாக குற்றம்சாட்டிய ராஜஸ்தானின் சச்சின் பைலட், கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
முன்னதாக, மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா (43) விலகினார். கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி சிவ சேனாவில் இணைந்தார். அஸ்ஸாமில், மூத்தத் தலைவர் தருண் கோகாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் தன்னுடையை குறைகளை கேட்க காங்கிரஸ் தலைமை மறுப்பதாகவும் கூறி அக்கட்சியிலிருந்து விலகினார்.
முதலமைச்சராக கெலாட் பொறுப்பேற்றதிலிருந்தே ராஜஸ்தான் காங்கிரஸில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, அரசுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்த பைலட், தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவுள்ளதாக தெரிவித்தார்.
ஜூலை 15ஆம் தேதி, இவ்விவகாரத்தில் பைலட் மீது நேரடியான விமர்சனங்களை வைத்த கெலாட், இளம் அரசியல் தலைவர்கள் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக கூறினார். இம்மாதிரியானவர்கள் தான் நாட்டை அழிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.