ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 40 ஊழியர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதலமைச்சரின் பாதுகாப்புடன் தொடர்புடைய காவல்துறை மற்றும் ராஜஸ்தான் ஆயுதப்படைக் காவலர்களும் அடங்குவர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அசோக் கெலாட், “தகுந்த விலகல் மற்றும் சுகாதார நெறிமுறைகளின் விதிமுறைகளைப் பின்பற்றுவது கரோனா பரவலை எதிர்த்துப் போராடக்கூடிய முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இதனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அடுத்த ஒரு மாதத்திற்கு யாரையும் சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இருப்பினும், அரசு அலுவல் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விவாதிப்பேன்.
கோவிட்-19 நெருக்கடியின் போது, மாநில மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த பணி. மருத்துவ வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம், தகுந்த இடைவெளி, வெளி தொடர்புகளை குறைப்பது, தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுவது, மற்ற அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.