ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஃபார் அகமது கச்சாவா. ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் (ஆக.07) அதிகாலை 4 மணியளவில் அருகில் இருந்த கிராமத்திற்கு தனது ஆட்டோவில் ஒருவரை அழைத்துச் சென்று, அங்கு இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கஃபாரின் ஆட்டோவை மறித்து, அவரிடம் புகையிலை கேட்டுள்ளனர். இதையடுத்து, கஃபார் தன்னிடமிருந்த புகையிலையை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், புகையிலையை வாங்க மறுத்த அவர்கள், கஃபாரை ’மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீராம்’ என்று கூற சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு கஃபார் மறுக்கவே, இருவரும் சேர்ந்து கஃபாரை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, கஃபார் தன்னுடைய ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்த தப்பமுயன்றுள்ளார். இருப்பினும், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு கஃபரை துரத்தியுள்ளனர். ஜக்மல்பூரா என்ற பகுதியில் ஆட்டோவை இடைமறித்து, கஃபாரை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கிய அவர்கள், ஜெய் ஸ்ரீராம், மோடி ஜிந்தாபாத் என்று கூறுமாறு மீண்டும் அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.