கரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தற்சார்பு இந்தியத் திட்டம் என்ற பெயரில் சிறப்பு நிதிச் சலுகை அறிவித்துள்ளது.
இந்த நிதிச்சலுகை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார அவரசநிலையை சந்தித்துவரும் நிலையில், அனைத்து நாடுகளும் நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்துவருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவில் ஊரடங்கால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக நிதிப்பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தைச் சரியான பாதையில் மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நிதிச்சலுகை அறிவிப்பில் நல்ல அம்சங்கள் இருந்தாலும், அறிவிப்பு போதுமானதாக இல்லை.
இந்தியாவில் தற்போது முக்கியச் சவாலாகத் திகழ்வது சொந்த கிராமங்களை நோக்கி குடிபெயர் தொழிலாளர்களின் தொடர் நகர்வாகும். அவர்களுக்கு இலவச உணவு தானியம், பருப்பு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
அதேவேளை அவர்களின் அடிப்படைத் தேவையான காய்கறி, சமையல் எண்ணெய், வசிப்பிடம் ஆகியவற்றை யார் உறுதிசெய்வது? எனவே, தேவையை உணர்ந்து அவர்களிடம் நேரடியாகப் பணம் வழங்குவதே முக்கியமாகும்" என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவால் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்!