தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராஜா என்றும் ராஜாதான்' - குலாம் நபி ஆசாத் புகழாரம்! - ராஜா

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவால் மட்டும்தான் தினமும் 3-4 உரை நிகழ்த்த முடியும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜா

By

Published : Jul 24, 2019, 4:19 PM IST

மாநிலங்களவையிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் இன்று ஓய்வுபெறுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர். அர்ஜுனன், ஆர். லட்சுமணன், டி. ரத்தினவேல், மைத்ரேயன் ஆகியோரை பாராட்டி சக உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத், "டி. ராஜாவால் மட்டும்தான் தினமும் 3-4 உரைகள் நிகழ்த்த முடியும். அதனால்தான் அவர் 'ராஜா'வாக உள்ளார். மைத்ரேயன் ஏன் அரசியலுக்கு வந்தார் என எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு புற்றுநோய் மருத்துவர். அவர் நினைத்திருந்தால், அவரால் ரூ. 2 கோடிவரை சம்பாதித்திருக்க முடியும். ஆனால் அவர் தற்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறார். பணத்தை விட்டுவிட்டு சேவையை தேர்ந்தெடுத்தார். மைத்ரேயனுக்கு அதிமுக மற்றொரு முறை வாய்ப்பளிக்க வாழ்த்துகிறேன்" என்றார்.

பாஜக மாநிலங்களவை தலைவர் தவார் சந்த் கெலாட் கூறுகையில், "டி. ராஜாவுக்காகவும், மைத்ரேயனுக்காகவும் வேண்டிக் கொள்கிறேன். இன்று ஓய்வுபெறும் ஐந்து உறுப்பினர்களும், அவர்களின் வாழ்க்கையை சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ளனர்" என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறுகையில், "ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா பேசுவதற்கு மட்டும் கூடுதல் நேரத்தை சபாநாயகர் ஒதுக்குவார். அவரை அனைவருக்கும் பிடிக்கும். தமிழர்களின் நலன்களை காக்க அனைவரும் சேர்ந்து தொடர்ந்து செயலாற்றுவோம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து ஓய்வு உரையைத் தொடங்கிய டி. ராஜா, இதுதான் மாநிலங்களவையில் என் கடைசி உரையாக இருக்கும் என்றதற்கு, எனவே இன்று மசோதா பற்றி பேச மாட்டீர்களா என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கிண்டலாக கேட்டார்.

பின்னர் தன் உரையைத் தொடர்ந்த ராஜா, "ஜனநாயகத்தின் பெரிய அமைப்பு நாடாளுமன்றமாகும். அம்பேத்கர் உருவாக்கிய நாடாளுமன்ற முறை தொடரவே விரும்புகிறேன். மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் பெரும் அமைப்பு நாடாளுமன்றமாகும். நான் மாநிலங்களவையில் இருந்துதான் ஓய்வுபெறுகிறேன்.

ஆனால் மக்களுக்காக கடைசி வரை உழைப்பேன். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வாழும் மக்களின் பாதுகாக்க வேண்டும். குடிமகன்களுக்கு அனுதாபம் தேவையில்லை. அவர்கள் மனிதர்களாக பார்க்கப்பட வேண்டும். அம்பேத்கர் சொன்னதுபோல் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய வெங்கையா நாயுடு, "பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா, இலங்கை தமிழர்கள் பிரச்னை குறித்து சிறப்பாக உரையாற்றியவர் ராஜா. ராஜா ஓய்வுதான் பெற்றுள்ளார். சோர்வு அடையவில்லை" என்றார்.

கண் கலங்கிய மைத்ரேயன்

கண் கலங்கியபடி தன் உரையை தொடங்கிய மைத்ரேயன், "14 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கிறேன். இன்று எனக்கு சூரியன் அஸ்தமனமாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அருண் ஜேட்லி உடல்நிலை நலம் பெற வேண்டி கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு இந்த அவை ஒரு தீர்வை தேடி தரவில்லை என்பதை நினைத்தால்தான் என மனதளவில் வலி ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details