டெல்லி : கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த மழையால் அவ்விரு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடாகவில் பெய்த மழையாலும், பெரும்பாலான அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் நேற்று (அக்.16) அம்மாநிலத்தில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருந்தது. மகராஷ்டிராவில் கடந்த மூன்று நாள்களில் 48 பேர் உயிரிழந்ததோடு, பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன.
இந்நிலையில், கர்நாடாகா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் வெள்ள பாதிப்பிலிருந்து மீளத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, வெள்ள பாதிப்பு குறித்து மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளத்தால் சுமார் மூன்றாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர். புனே, சோலபூர், சங்கிலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 87 ஆயிரம் ஹேக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளன" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.