தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் முக்கிய நகரங்களான வனஸ்தலிபுரம், எல்.பி. நகர், செகந்ராபாத், குட்கப்பள்ளி, ஹைடெக் சிட்டி, மெஹந்திபட்டினம், அட்டப்பூர், சவுராஸ்தா, அரம்கர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் கனமழையில், சுவர்கள் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும், மலையோரப் பகுதிகளில் பாறைகள் சரிந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மலக்பேட்டில் உள்ள யசோதா மருத்துவமனை அருகே மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.