காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துவருகின்றன. அதன்படி, இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையிலும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், சீன நிறுவனத்தின் பங்கேற்பு காரணமாக 44 அதிவேக "வந்தே பாரத்" ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் நேற்று ரத்துசெய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “44 அதிவேக ரயில் பெட்டிகளை (வந்தே பாரத்) உற்பத்தி செய்வதற்கான டெண்டர் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் திருத்தப்பட்ட விதிகளுடன் (இந்திய தயாரிப்புக்கு (மேக் இன் இந்தியா) முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய டெண்டர் விடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயின் ஐசிஎஃப் தொழிற்சாலை 44 அதிவேக வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய ஜூலை 10ஆம் தேதி டெண்டரை அறிவித்தது. இந்த டெண்டரில் ஐந்து இந்திய நிறுவனங்கள் பங்கேற்றன. அத்துடன் சீனாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள சி.ஆர்.ஆர்.சி. யோங்ஜி எலக்ட்ரிக் கம்பெனி லிமிடெட் நிறுவனமும் பங்கேற்றது.
இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இந்த டெண்டர் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையால் ட்ரைன் 18 (Train 18) திட்டத்திற்காக சுமார் 80 விழுக்காடு உள்நாட்டுப் பொருள்களுடன் இந்தப் பெட்டிகள் முதலில் அக்டோபர் 2018இல் தயாரிக்கப்பட்டன. அதன்பின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்ட இந்த ரயில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி-வாரணாசி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சீன நிறுவனங்களின் உதவியின்றி இந்தியாவில் 5ஜி சேவை?