நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாஸ்க் அணிவது, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்வது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் வெளியே செல்லும் அவசரத்திலும், ஊருக்கு செல்லும் ஆசையிலும் மக்கள் இவற்றை பின்பற்ற மறந்து விடுகின்றனர். எனவே, இதை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் உள்ள ஸ்டால்களில் கரோனா அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
கரோனா அத்தியாவசிய பொருள்கள் ரயில் நிலையங்களில் விற்பனை! - நாட்டில் கரோனா வைரஸ்
டெல்லி: பயணிகளின் தேவைக்கான கரோனா அத்தியாவசிய பொருள்களான மாஸ்க், கிருமி நாசினி, கையுறை முதலியவற்றை ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டால்களில் விற்பனை செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதில் பணியாற்றும் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "ரயில் நிலையங்களில் தனியார் ஒப்பந்தகாரர்களால் நடத்தப்படும் ஸ்டால்களில் பயணிகளுக்குத் தேவையான புத்தகங்கள், மருந்துகள், சாப்பாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரயில்வே வாரியம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பயணிகளைப் பாதுகாக்க தேவையான அத்தியாவசிய பொருள்களையும் விற்க முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள் உள்ளிட்டவை அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவும் அபாயத்தால் ரயில்களில் துண்டு, தலையனை உறை, போர்வை ஆகியவை வைக்கப்படவில்லை. எனவே, பயணிகள் ஸ்டால்களில் இந்தப் பொருள்களை முழு கிட்டாக அல்லது தனித்தனியே வாங்கிகொள்ளலாம்" என்றார்.