குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தரப்பட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், அஸ்ஸாம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
இதனால், நாடு முழுவதும் ரயில்வே துறைக்குச் சொந்தமான 88 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் மட்டும் 72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்திற்குள்பட்ட பகுதிகளில் 13 கோடி ரூபாய் மதிப்பிலும் வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலும் ரயில்வே துறைக்குச் சொந்தமான சொத்துகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ரயில்வே உங்கள் சொத்து, அதை தயவுசெய்து எதிர்ப்பைக் காட்டும் பொருளாக மாற்ற வேண்டாம். தேர்வுக்காகவோ அல்லது சிகிச்சையைப் பெற யாரேனும் ஒருவர், ரயிலை பயன்படுத்துகின்றனர். திட்டமிடப்படாத இதுபோன்று ரயில் நிறுத்தப் போராட்டங்கள் பயணிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை!