நாட்டின் பொது பட்ஜெட் (வரவு-செலவு அறிக்கை) பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது சுட்டுரை (ட்வீட்டர்) பக்கத்தில் இந்தியில் விமர்சித்துள்ளார்.
அதில், “பொதுமக்களைத் துண்டாடும் நரேந்திர மோடியின் பட்ஜெட்டால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “அதீத பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சரிந்துவரும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) ஆகியவை நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டன. இதனால் காய்கறிகள், பருப்புகள், சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு உருளைகள் விலை கடுமையாக உயர காரணமாகிவிட்டன. இதனால் ஏழைகளின் உணவுகள் பறிக்கப்பட்டுள்ளன. மோடியின் பட்ஜெட் நாட்டு மக்களைத் துண்டாடுகிறது” என தெரிவித்திருந்தார்.
துண்டாடுகிறது என்ற வார்த்தைக்கு துக்டே துக்டே என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் அமித் ஷா, துக்டே துக்டே குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அதே வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி, நரேந்திர மோடியை தாக்கியுள்ளார். பொது பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “கடந்த 65 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள், காய்கறிகளின் அதீத விலையேற்றத்தால் அது ஏழைகளுக்கு எட்டாத கனியாகிவிட்டது. இவ்வளவு விலைகொடுத்து ஏழைகளால் எவ்வாறு சமையல் எண்ணெய், காய்கறிகளை வாங்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பாஜக அரசு ஏழைகளின் வயிற்றில் மிதித்து, அவர்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை பறித்துவிடுகிறது” என கடுஞ்சொற்களாலும் தாக்கி பிரியங்கா காந்தி பேசியிருந்தார்.