தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2019, 1:21 PM IST

ETV Bharat / bharat

காங்கிரஸ் ஏன் படுதோல்வியை சந்தித்தது? ஒரு அலசல் ரிப்போர்ட்

டெல்லி : நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து காணலாம்.

ராகுல் காந்தி

பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரஃபேல் விவகாரம் உள்ளிட்டவைகளை கையில் எடுத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. குறிப்பாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரப்புரையை மேற்கொண்டார். அவரது தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரம் செலுத்தும் திட்டம், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி என குறிப்பிட்டிருந்தார். இளம் வாக்காளர்களை கவரும் வகையில், கல்லூரிகளுக்கு சென்று நாட்டு நடப்புகளை எடுத்துரைத்து, அவர்களது கேள்விக்கும் பதிலளித்தார்.

காங்கிரஸ் கொடி

'மேலும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற குற்றச்சாட்டுகளை, களையும் வகையில் இந்த முறை அமேதி மட்டுமின்றி, தென் இந்தியாவின் பிரதிநிதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். பாஜகவுக்கு எதிராக வகுத்த வியூகம் சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே 'மோடி திருடன்' என்று சொன்னதாக கூறி ராகுல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதற்காக உச்ச நீதிமன்றத்திலும் அவர் இருமுறை மன்னிப்பு கேட்க நேர்ந்தது. இது அவரது செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி

தவிர ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6 ஆயிரம் பணம் செலுத்துவதாக அறிவித்த திட்டமும் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோடிக்கு எதிராக அலை வீசியதாக கூறப்பட்ட நிலையில், அதை சரியாக அறுவடை செய்வதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அவர் ஒழுங்குபடுத்த தவறிவிட்டதும் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி

2014 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அடைய முடியாத அளவுக்கு அடைந்த அதே படுதோல்வியை இந்தத் தேர்தலிலும் சந்தித்திருப்பதால், அதற்கு ராகுல்தான் காரணம் என விமர்சனங்கள் எழும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதைப்புரிந்து கொண்ட ராகுல் இந்த தோல்விக்கு 100 விழுக்காடு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரதமராக மீண்டும் நரேந்திரமோடியே வரவேண்டும் என மக்கள் விரும்பி அளித்த முடிவை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கும், செயற்குழுக் கூட்டத்தில்தான் அதுபற்றி முடிவெடுக்கப்படும் என பதிலளித்து இப்போதைக்கு தோல்விக்கான விமர்சனங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

கடந்தாண்டு நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எழுச்சிபெற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றி எதிரொலிக்காதது ஏன் என்ற கேள்வியும் தொண்டர்களை அதிகம் யோசிக்க வைத்திருக்கிறது. இன்னொரு புறம் அமேதி தொகுதியில் வரலாறு காணாத அளவில் ராகுல் அடைந்த தோல்வியும் காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி அதன் தலைவர் ராகுலும் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details