டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலம், நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கருத்துக்களையும், போராட்டங்களையும் முன்வைக்கின்றன.
இந்நிலையில், "மோடி அரசாங்கம் விவசாயிகள் மீது நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக நம் குரல்களை ஒன்றாக எழுப்புவோம்'' என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் 'விவசாயிகளுக்காக பேசுங்கள்' என்ற பரப்புரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, "ஒரு காணொலியின் மூலமாவது விவசாயிகளுக்காக பேசுங்கள்" என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.