மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியின் எல்லையில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்றுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. இந்த மனுவை ராகுல் காந்தி அக்கட்சியின் எம்பிக்களுடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார்.