தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பதவி விலகியே தீருவேன்..!' - அடம்பிடிக்கும் ராகுல்? - காங்கிரஸ்

டெல்லி: தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rahul gandhi

By

Published : May 27, 2019, 5:41 PM IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்கு பேரிடி அக்கட்சிக்கு விழுந்துள்ளது. ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போனது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ராகுல் காந்தி, தலைவராக தோற்றது, அமேதி தொகுதியில் தோற்றது என விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடிதம் அளித்தார். ஆனால் அதனை ஏற்க கட்சி மறுத்துவிட்டது.

மேலும், ராகுல் பதவி விலகினால் தென் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். ப.சிதம்பரம் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் தனது முடிவை கைவிட தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே அவர், தனது முடிவை கைவிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான வேணுகோபால் மற்றும் அகமது படேல் ஆகியோர் இன்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, முடிவை கைவிட ராகுலிடம் அவர்கள் வலியுறுத்தியதாகவும் அதற்கு, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details