மக்களவையில் நேற்று சிறப்பு பாதுகாப்புக் குழு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. ஆ.ராசா காந்தியை கோட்சே கொன்றது பற்றி பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர், கோட்சே போன்ற தேச பக்தரை சுட்டிக்காட்டி பேசக்கூடாது என்றார். இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி, பிரக்யா சிங் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 'அந்த பெண் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இதயம் அப்படித்தான் இருக்கும். அதை மறைக்க முடியாது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்த ட்வீட் செய்துள்ள ராகுல், 'பயங்கரவாதி பிரக்யா பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம்' என குறிப்பிட்டுள்ளார்.