சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவை அதிக அளவில் பாதிக்காமல் இருப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடுமே ஸ்தம்பித்துள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் பிழைப்புக்காக குடிபெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
குறிப்பாக, பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனர் குடிபெயர்ந்த தொழிலாளர்கள். இப்படி ஒரு சூழல் உருவாகும் என்பதை முன்னரே அறிந்து, உரிய முன்னேற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
அரசு இயந்திரமே இதனை செய்வதற்கு தவறிவிட்டால், வேறு யார் முன்னின்று இத்தனை பெரிய காரியத்தை செய்து முடிப்பது என்பதே சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்வி.
சாலையில் அமர்ந்து மக்களுடன் உரையாடும் ராகுல் இந்நிலையில், டெல்லியிலிருந்து சொந்த மாநிலத்திற்கு நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்களை சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். முன்னதாக, ராகுல் வருவதை அறிந்த காவல் துறையினர், குடிபெயர் தொழிலாளர்களைக் கைது செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அத்தகவலை காவல் துறையினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.