டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களது போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததையடுத்து, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்புவிடுத்தது. அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியைச் சந்தித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது.
இதற்கிடையில், இந்த வாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் மூன்று முறை வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளுமே தோல்வியையே சந்தித்தன.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். மேலும், வரும் எட்டாம் தேதி விவசாயிகள் நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.