உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடலையும் பெற்றோர்களுக்கு அளிக்காமல் உ.பி. காவல் துறையினர் நள்ளிரவில் தகனம்செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாவது குறித்து மக்கள் எடுத்துரைக்கும் வீடியோ பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உண்மையை மறைக்க விரும்பவர்களுக்கு இந்த வீடியோ பதிவை காண்பிக்க விரும்புகிறேன். நாம் எப்போது மாறுகிறோமா அப்போதே நாடும் மாறும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இது குறித்து அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.கே. சாஹி கூறுகையில், "அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தற்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பலத்த மழை: காக்கிநாடாவில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்