மாதேபுரா (பிகார்): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிகார்கஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு சோசலிஷ மூத்தத் தலைவர் சரத் யாதவ்வின் மகள் சுபாஷினி யாதவ்வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, “வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் நரேந்திர மோடி, நிதிஷ் குமார் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.
பேரணியில் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “கரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்தில் ஏழை தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி -யும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவ்வும் கைகொடுக்கவில்லை. பிரதமரின் இதயத்தில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடம் இல்லை. கரோனா நெருக்கடி காலத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இதனை பிகார் மக்கள் நன்கறிவார்கள். இதற்கிடையில் புதிய இடைத்தரகர்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அந்தத் இடைத்தரகர்கள் எளியவர்கள் அல்ல, அவர்கள் அம்பானி, அதானி போன்றவர்கள். இனிவரும் காலங்களில் விவசாய பொருள்கள் விற்பனை செய்யும் மண்டிகள் காணாமல் போய்விடும்.