ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இதைத் தொடர்ந்து சச்சின் பைலட், அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனக் கூறி அவரது துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என இவ்வழக்கில் நேற்று (ஜூலை 24) நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு சதி செய்து வருகிறது. ராஜஸ்தானில் உள்ள எட்டு கோடி மக்களையும் அக்கட்சி அவமதிக்கிறது. சட்டப்பேரவையை கூட்டினால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் என்ற உண்மையை நாடு தெரிந்துகொள்ளும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப்பின் முதலமைச்சர் கெலாட் கோரிக்கை