புதுச்சேரி உசுடு தொகுதிக்கு உள்பட்ட ராமநாதபுரம் என்ற கிராமத்தில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை இயங்கிவருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் சாலைகள் அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் சட்டப்பேரவை உறுப்பினர் தீபாய்ந்தன் கேள்வி எழுப்பினார். ஆனால் இதுவரை அலுவலர்கள் யாரும் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்யவில்லை. இதனைக் கண்டிக்கும்விதமாக புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தை தீபாய்ந்தன் எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.