குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு துயரங்களை வாரிக் கொடுத்திருக்கிறது, கரோனா ஊரடங்கு. அந்த வகையில் சென்னையிலிருந்து கோலார் மாவட்டத்திற்கு வேலை நிமித்தமாக குடிபெயர்ந்த பாத்திமாவின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் அடியோடு புரட்டிவிட்டது.
பாத்திமாவின் உலகம், அவளுடைய சகோதரன் மற்றும் தாயை மையமாகக் கொண்டது. அவளின் குழந்தை பருவத்தை வண்ணமயமான நினைவுகளுடன் மாற்றியவர் அவளுடைய சகோதரன்.
துரதிஷ்டவசமாக பாத்திமாவின் தாயார், வேலையில் ஈடுபடும்போது அவருடைய கால்களை இழந்துவிட்டார். இதனால் பாத்திமாவை மட்டுமல்லாது, அவளுடைய தாயாரையும் பாத்திமாவின் சகோதரன்தான் கவனித்துவந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக பாத்திமாவின் சின்னஞ்சிறிய குடும்பம் சென்னையிலிருந்து கோலார் மாவட்டம், பங்கார்பேட் நகரத்திற்கு வந்தனர்.
ஊரடங்கினால் வருவாய் இழந்த பாத்திமாவின் குடும்பம் ஒரு வேளை உணவிற்கே சிரமப்பட்டு வந்தனர். இந்த வறுமை நிலையில் பாத்திமாவின் சகோதரன் பல்வேறு வேலைகளுக்கு முயன்று, கடைசியில் பிச்சையெடுத்து தன் குடும்பத்தின் பசியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் பாத்திமாவின் அண்ணன் தொலைந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி பாத்திமா தன் சகோதரை வீதி வீதியாகத் தேடி திரிந்துள்ளார். பங்கார்பேட் முழுவதும் தேடியும் சிறுமியில் சிறிய கண்களில் அவளுடைய அண்ணனின் பிம்பம் விழவில்லை.