தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரைப்பட பாணியில் டிரக்கில் வைத்து ஆயுதம் கடத்திய பயங்கரவாதிகள் - கைது செய்த பஞ்சாப் காவல்துறை! - இரண்டு தீவிரவாதிகள் ஆயுதங்களோடு கைது

சண்டிகர் : பயங்கரவாத தாக்குதல்களை நடத்த காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் ஆயுதங்களை கடத்த முயன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Punjab police arrest two Kashmir-based LeT militants
Punjab police arrest two Kashmir-based LeT militants

By

Published : Jun 11, 2020, 10:19 PM IST

பஞ்சாபிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கை எறிக்குண்டுகளை எடுத்துச் செல்ல முயன்றபோதே பதான்கோட் காவல்துறையினர், பயங்கரவாதிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய பஞ்சாப் காவல்துறை தலைவர் டிங்கர் குப்தா கூறுகையில், "அமிர்தசரஸ்-ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ் சதர் எனும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஜே.கே.-03-சி -7383 என்ற பதிவெண்ணைக் கொண்ட டிரக்கை சோதனை செய்தோம். அப்போது, அந்த வண்டியில் இருந்த பத்து கை கையெறி குண்டுகள், 60 தோட்டாக்கள், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றி அந்த வண்டியிலிருந்த அமீர் உசேன் வாணி (26), வாசிம் ஹசன் வாணி (27) என்ற இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையின் போது, ​​பஞ்சாபிலிருந்து இஷ்பாக் அகமது தார் பஷீர் அகமது கான் என்பவருக்கு இந்த ஆயுதக்கடத்தல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முன்னாள் காவல்துறை அலுவலரான அந்த நபர், கடந்த 2017ஆம் ஆண்டில் தீவிரவாத அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, தலைமறைவு வாழ்க்கையை ஏற்றவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸில் உள்ள காய்கறிச் சந்தைக்கு அருகிலுள்ள மக்பூல்பூரா-வல்லா சாலையில் முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில் இன்று (ஜூன் 11) அதிகாலை அடையாளம் தெரியாத இருவரிடமிருந்து ஆயுதங்களை பெற்றதாக இருவரும் கூறியுள்ளனர். அமிர்தசரஸில் உள்ள மண்டியிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றி செல்வதாக வெளித்தோற்றத்தை காட்ட அந்த டிரக்கை பயன்படுத்தியுள்ளனர். அதில் சரக்குகளோடு ஆயுதங்களை மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளனர் என தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள அமீர் ஹுசைன் வாணி இதற்கு முன் பஞ்சாபிற்கு மேற்கொண்ட பயணங்களில், தனது மேலிட தலைவரிடமிருந்து வந்த உத்தரவின் பேரில் இஷ்பாக் அகமது தார் மற்றும் டாக்டர் ரமீஸ் ராஜா ஆகிய இருவரிடமிருந்து ரூ. 20 லட்சம் ஹவாலா பணத்தை கைமாற்றி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தற்போது அந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, முந்தைய அமிர்தசரஸ் பயணத்தில், ​​ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இருவரை (ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் எல்.ஈ.டி) பஞ்சாபிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அழைத்துச் சென்றதையும் அமீர் ஒப்புக்கொண்டுள்ளார். ஹிஸ்புல் முஜாஹிதீனின் சதாம் அகமது பதர் மற்றும் எல்.ஈ.டி.யின் ஜாசிம் அகமது ஷா என அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது உளவுத்துறை தகவலின் மூலமாக தெரியவந்துள்ளது.

இந்த இருவர் மீதும் பிரிவு ஆயுதச் சட்டம், வெடிபொருள்கள் தடை திருத்தச் சட்டம் 2001 மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் 1967 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடரும் விசாரணைகள் மூலமாக லஷ்கர்-இ-தொய்பாவின் இந்த வலையமைப்பு, பஞ்சாபில் அவற்றின் செயல்பாடுகளை குறித்து ஜம்மு&காஷ்மீரின் காவல்துறையினரின் உத்துழைப்புடன் அவற்றை முறியடிக்க உள்ளோம்” என கூறினார்.

பஞ்சாபில் காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஜ அமைப்பின் ஆதரவோடு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பஞ்சாபிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வருவதாக அண்மையில் தெரிவித்திருந்த உளவுத்துறை தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, அமிர்தசரஸிலிருந்து போதைப்பொருள் கடத்த வந்திருந்த ஹிலால் அகமது வாகே என்ற காஷ்மீரைச் சேர்ந்த் இளைஞரை பஞ்சாப் காவல்துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details