உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசு ஏற்படுத்திவருகின்றன. வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் கிருமி நாசினி உபயோகிப்பது, கைகளை கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளது பஞ்சாப் அரசு. அந்த வகையில், கரோனா தொடர்பான லேட்டஸ்ட் தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ஃபேஸ்புக்கோடு இணைந்து சாட்போட் ஒன்றை பஞ்சாப் அரசு உருவாக்கியுள்ளது.
இந்தச் சாட்போட் https://www.facebook.com/PunjabGovtIndia என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளது. இந்தப் பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் சாட்போட்டை எளிதாக அணுகலாம். மக்கள் அனுப்பும் குறுந்தகவல் விரைவாக பதிலளிக்கப்படும். சாட்போட்டில் உள்ள முதல் திரையில், கரோனா தகவல், அத்தியாவசிய கடைகளின் விவரம், மொழி மாற்று ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கிறது. இதுமட்டுமின்றி சாட்போட்டில் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உரையாடும் வசதி உள்ளது.