பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் ஜூன் 6ஆம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் அருகில் சணல் சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் கால் தடுக்கி விழுந்தான். தகவலறிந்து அங்குவந்த மீட்புக் குழுவினர், உள்ளூர் நிர்வாகம் இணைந்து அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இணையாக குழியைத் தோண்டி, அதன்மூலம் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர்.
ஆனால், சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறானது 9 இன்ச் டயா மீட்டர் அளவு கொண்டதால், அவனால் சிறிதளவுகூட நகர முடியாத நிலை இருந்தது. அதனால், அத்திட்டம் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி அதிகாலை வரை கிட்டத்தட்ட 40 மணிநேரம் வரை சிறுவனின் செயல்பாடுகளை அலுவலர்கள் கவனித்துக்கொண்டே இருந்தனர்.
இதனிடையில் குழந்தைக்கு சுவாச சிக்கல் ஏற்படாத வகையில், ஒரு சிறிய குழாய் மூலம் பிராணவாயு வழங்கப்பட்டது. மேலும், சிறுவனை அலுவலர்கள் கண்காணிப்புக் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஆனால், சிறுவனின் முகம் சணல் பையால் மூடப்பட்டிருந்ததால், உணவு எதுவும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.