தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனேவாசிகளில் சரிபாதி பேருக்கு கரோனா பாதிப்பு! - Most affected Indian city by Corona

மும்பை : புனேயில் நடத்தப்பட்ட ஆன்ட்டிபாடி மருத்துவ சோதனையில் 51.05 விழுக்காடு புனேவாசிகளுக்கு கரோனா ஆன்ட்டிபாடி இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது ஏதேனும் ஒரு கட்டத்தில் இவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pune Coronavirus
Pune Coronavirus

By

Published : Aug 19, 2020, 2:44 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா உள்ளது. குறிப்பாக, புனேவில் பரிசோதனைகள் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில நாள்களாகவே அந்நகரில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

பொதுவாக ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அவரது உடலில் ஆன்ட்டிபாடிகள் உருவாகும். இந்த ஆன்டிபாடி சோதனைகள் மூலம் ஒரு சமூகத்தில் எத்தனை பேர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை உத்தேசமாகக் கண்டறிய முடியும்.

அதன்படி புனேவில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆன்ட்டிபாடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்காக ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை 1,664 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அவர்களில் சுமார் 51.05 விழுக்காடு நபர்களின் உடல்களில் கரோனா ஆன்ட்டிபாடிகள் இருப்பதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி நகர்கர் தெரிவித்துள்ளார். அதாவது இந்த 51.05 விழுக்காடு மக்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அவர்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் தென்படாத asymptomatic நோயாளிகளாக இருக்கலாம் என்றும் இதனால் அவர்கள் அறியாமலேயே மற்றவர்களுக்கு கரோனாவை பரப்பியிருக்கலாம் என்றும் மருத்துவர் ஆர்த்தி நகர்கர் தெரிவித்துள்ளார்.

ஆண்களில் 52.8 விழுக்காட்டினருக்கும் பெண்களில் 50.1 விழுக்காட்டினருக்கும் இந்த ஆன்டிபாடிகள் இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிசைப்பகுதிகளில் 62 விழுக்காட்டினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர்களிடையே கரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தது.

முன்னதாக, மும்பையில் இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 18 விழுக்காடு மும்பைவாசிகளுக்கு கரோனா ஆன்ட்டிபாடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெல்லிக்கு அடுத்தப்படியாக கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரகாக புனே உள்ளது. டெல்லியில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், புனேவில் இதே வேகத்தில் கரோனா பரவும் பட்சத்தில் விரைவில் இந்தியாவில் அதிக கரோனா பாதிப்புகள் கொண்ட நகராக புனே மாறலாம் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா போர்: இந்தியாவுக்கு பிரிட்டன் 3 மில்லியன் பவுண்ட் நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details