போர்ச் சூழல் அல்லது மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பணிபுரிவது பத்திரிகையாளர்களுக்கு கத்தி முனையில் நடப்பது போன்றதாகும். நிருபர்கள் எழுத்தின் மூலம் நம்பகமான குரல்களாக ஒலிக்கின்றனர், அதேசமயம் புகைப்பட பத்திரிகையாளர்கள் (photo journalists) தங்கள் கதைகளை லென்ஸ் மூலம் பதிவு செய்கின்றனர். இந்த தைரியம் அவர்களை மக்களுக்கு நெருக்கமானவர்களாக மாற்றுகிறது, சுவாரஸ்யமான கதைகளை பதிவு செய்யத் தூண்டுகிறது. இதற்கு உச்சப்பட்ச விலையாக சில நேரம் அவர்கள் உயிரையும் கொடுக்க வேண்டியுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முஸ்தாக் அலி, சக பத்திரிகையாளர் யூசுப் ஜமீலுடன் சேர்ந்து எழுதிய தொகுப்புக்காக குண்டு வைத்து கொல்லப்பட்டார். அதேபோல் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் பிரதீப் பாட்டியா, ஸ்ரீநகரில் நடக்கும் பிரச்னைகளின் ஆழம் குறித்து அறிய நினைத்து கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நமது மூன்று பத்திரிகையாளர்கள், முக்தார் கான், டர் யாசின், ஜன்னி ஆனந்த் ஆகியோர் தங்கள் பணிக்காக கௌரவமிக்க புலிட்சர் விருதை பெற்றுள்ளனர். 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்ட பின் அங்கு நிலவும் சூழலை தங்கள் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் இவர்கள்.
6 வயது பெண் குழந்தை ஒரு கண்ணில் காயத்துடன் இருக்கும் புகைப்படம், அரசியல் மோதல்கள் நிகழும் இடத்தில் குழந்தைகளின் நிலை என்ன என்பதை விளக்குகிறது. இந்த புகைப்படம் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த குழந்தைகளின் நிலைக்கு சாட்சியாக இருக்கிறது.
அதேபோல் மாணவர்களின் போராட்டத்தை மடைமாற்ற பாதுகாப்புப் படையினர் இரு சக்கர வாகனங்களை ஆக்ரோஷமாக தாக்குவது போன்ற புகைப்படமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தகர்த்தப்பட்ட வீட்டிலுள்ள சிதைந்த பொருட்களை சிலர் அகற்றுவது போன்ற புகைப்படம், புலிட்சர் விருது பெறக் காரணமாக அமைந்தது. இந்தப் புகைப்படம் காஷ்மீர் மக்களின் நிரந்தரமற்ற வாழ்வையும், அவர்களின் அவலநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
பெண்கள் போராட்டம், பெண்களும் சிறுமிகளும் குரான் வைத்து தொழுகை செய்வது போன்ற புகைப்படங்களை மதத்தோடு தொடர்புபடுத்தி சிலர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எடுத்துக்காட்டாக சித்தரிக்க நினைக்கின்றனர். பிரச்னை என்னவென்றால், சிலருக்கு பிடிக்காத கசப்பான உண்மையை பதிவு செய்ததால், கௌரவமிக்க இவ்விருதை வென்ற தருணத்தை பத்திரிகையாளர்கள் கொண்டாடக்கூடாது என நினைக்கின்றனர்.
மூன்று பத்திரிகையாளர்கள் புலிட்சர் விருதை வென்றது சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம், அவர்கள் எடுத்த புகைப்படம் மட்டுமல்ல, சில அமைப்பாளர்கள் அதற்கு அளித்த விளக்கங்களும் காரணம். விருது வென்ற இந்திய பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள் என ராகுல் காந்தி ட்வீட் செய்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இந்திய பத்திரிகையாளர்களா அல்லது காஷ்மீர் பத்திரிகையாளர்களா என்ற விவாதத்தை கிளப்பியது.
இந்தியர் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும்படி காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா பதிவு செய்திருந்தார். பத்திரிகையாளர்கள் புகைப்படம் விவரிக்கப்பட்ட விதத்தை கொண்டாடுவதா அல்லது இந்த முன்னொட்டுகள் சண்டையை கருத்தில் கொள்வதா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.